Tuesday, June 30, 2026 11:11 am
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக , முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக இன்று (30) அழைத்துவரப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக , சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் , கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணை தொடர்பிலேயே அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்த மனிதக் கொலைகள் குறித்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னரே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இந்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.
இவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு , தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

