Tuesday, June 30, 2026 12:29 pm
2026 பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தொடரிலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
48 அணிகள் பங்கேற்ற உலகக் கிண்ண கால்பந்து தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. ரவுண்ட் ஒவ் 32 சுற்று தற்போது நடந்து வருகிறது.
இதில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஒவ் 16 சுற்றுக்குள் நுழையும்.
அந்தவகையில் பீஃபா உலகக் கிண்ணத் தொடரில் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம் சந்தித்துள்ளது.
ரவுண்ட் ஒவ் 32 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் 4 முறை சம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை பராகுவே எதிர்கொண்டது.
4 முறை சம்பியனான ஜேர்மனியை வீழ்த்தி பராகுவே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரத்திலும் அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேர முடிவிலும் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தது. இதனை அடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி பயன்படுத்தப்பட்டது.
ஜேர்மனி அணியின் பயிற்சியாளர் ஜூலியன் நாகெல்ஸ்மேன் ஜேர்மனிக்காக தொடரில் அதிக கோல் அடித்த டெனிஸ் உன்டாவ்வுக்கு முதல் முறையாக ஆரம்ப வரிசையில் வாய்ப்பளித்து அதிரடியான வியூகத்துடன் களம் இறங்கினார்.
போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஜேர்மனி பந்தை முழுமையாக தன் வசம் வைத்திருந்தது. போட்டியின் 35ஆவது நிமிடத்தில் ஜேர்மனி 244 பந்துப் பரிமாற்றங்களைச் செய்திருந்தபோது பராகுவே வெறும் 31 பந்துப் பரிமாற்றங்களை மட்டுமே செய்திருந்தது.
முதல் பாதியின் முடிவில் ஜேர்மனி தனது எதிரணியை விட 253 பந்துப் பரிமாற்றங்கள் அதிகமாக செய்திருந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இத்தனை பாஸ்கள் அதிகமாக செய்தும் முதல் பாதியில் ஒரு அணி பின்தங்கியிருப்பது இதுவே முதல் முறையாகக் காணப்படுகின்றது.
போட்டியின் 42ஆவது நிமிடத்தில் மிகேல் அல்மிரோன் வலது பக்கவாட்டில் இருந்து வேகமாக பந்தை கடத்தி வர ஜூலியோ என்சிசோ தலையால் முட்டி கோலாக மாற்றினார். உலகக் கிண்ண விலகல் முறையிலான போட்டி வரலாற்றில் பராகுவே அணி பதிவு செய்த முதல் கோல் இதுவாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போட்டியின் 54-வது நிமிடத்தில் புளோரியன் ரிட்ஸ் கொடுத்த பந்தை ஹை ஹவேர்ட்ஸ் தலையால் முட்டி கோலாக்கி போட்டியை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார். கூடுதல் நேரத்தின் 102 ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோலானது கோல் காப்பாளரை தள்ளி விட்டதாக காணொளி மூலம் அறியப்பட்டதால் அந்த கோல் மத்தியஸ்தரால் நிராகரிக்கப்பட்டது. இது ஜேர்மனிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் இதற்கு முன்பு ஜேர்மனி அணி பங்கேற்ற எந்தவொரு பெனால்டியிலும் தோல்வியடைந்தது இல்லை. இந்த அசைக்க முடியாத சாதனையை இன்று பராகுவே அணி சுக்குநூறாக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே அபார வெற்றிபெற்றது.
ஜேர்மனி தரப்பில் நட்சத்திர வீரர்கள் ஹவேர்ட்ஸ், நிக் வோல்டமேட் மற்றும் ஜொனாதன் தா ஆகியோர் தங்களது வாய்ப்புகளை கோலாக மாற்றத் தவறினர் அதேபோன்று பராகுவே அணியும் ஆரம்பத்தில் இரண்டு வாய்ப்புகளை தவறவிட்டது.
இறுதியில் பராகுவேயின் ஜோஸ் கனாலே மிகத் துல்லியமாக பந்தை வலைக்குள் தள்ளி தனது அணியின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் ரவுண்ட் ஒவ் 16 சுற்றுக்கு பராகுவே முன்னேறியது. பராகுவேக்கு எதிராக தோல்வியடைந்த ஜெர்மனி நடப்பு உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது.
உலகத் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் ஜேர்மனி அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்த வரலாற்று வெற்றியை பராகுவே ரசிகர்கள் மற்றும் வீரர்கள் கோலகலமாகக் கொண்டாடினர்.
பராகுவே அணி அடுத்த சுற்றில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அல்லது சுவீடன் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 4 முறை உலக சம்பியனான ஜெர்மனி நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது ஜெர்மனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகள் கால்பந்து உலகக் கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது

