Wednesday, June 17, 2026 4:13 pm
2026 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளினதும் போட்டித்தொடர் ஒவ்வொரு சுவாரஸ்யங்களை விட்டுச்செல்கின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்ததுடன் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.
அல்ஜீரியாவுக்கும் ஆர்ஜன்டீனாவுக்கும் இடையிலான போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஹெட் ட்ரிக் கோல்கள் அடித்து நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவுக்கு 3 – 0 என இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டத்தில் மெஸ்ஸி பதிவு செய்த முதலாவது ஹெட் – ட்ரிக் இதுவாகும். அதுமட்டுமன்றி இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது ஹெட் – ட்ரிக் ஆகவும் இது பதிவானது.
இந்த ஹெட் – ட்ரிக் கோல்கள் மூலம் ஜேர்மனி வீரர் மிரஸ்லாவ் க்ளோஸின் 16 மொத்த கோல்கள் என்ற உலகக் கிண்ண சாதனையை லியோனல் மெஸ்ஸி சமப்படுத்தியுள்ளார்.
அதேபோன்று ஜோர்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரியா அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. போட்டியின் 21-வது நிமிடத்தில் ஆஸ்திரிய வீரர் ரொமானோ ஷ்மிட் அற்புதமான கோல் அடித்து தனது அணியை 1-0 என்ற முன்னிலையை அடைய வழிசெய்தார். இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 50-வது நிமிடத்தில் ஜோர்தான் அணியின் அலி ஒல்வான் ஒரு சிறப்பான கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைப்படுத்தினார்.
ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் ஜோர்தான் வீரர் யாசான் அல்-அரப் எதிர்பாராதவிதமாக தனது சொந்தப் பகுதிக்குள்ளேயே கோல் அடித்ததால் ஆஸ்திரியா 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஆஸ்திரிய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி நட்சத்திர வீரர் மார்கோ அர்னாவுடோவிக் கோல் அடித்து அணியின் 3-1 என்ற வெற்றியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.
பிரான்ஸ் அணி 3 – 1 என்ற கணக்கில் செனகல் தேசிய கால்பந்து அணியை வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடங்கியுள்ளது.
முதல் பாதியில் செனகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. பிரான்ஸ் அணியை விட செனகல் அதிக ஷாட்களை முயற்சித்தது. 2 ஆவது பாதியில் பிரான்ஸ் தனது ஆட்டத்தின் தரத்தை உயர்த்தியது. 63 ஆவது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே கொடுத்த துல்லியமான பாஸை எம்பாப்பே கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். மாற்று வீரராக களமிறங்கிய பிராட்லி பார்கோலா 79 ஆவது நிமிடத்தில் செனகல் கோல்கீப்பர் எட்வார்ட் மெண்டியை ஏமாற்றும் வகையில் பந்தை வலைக்குள் செலுத்தினார். பிரான்ஸ் முன்னிலையை 2 – 0 ஆக முன்னிலை பெற்றது.
பின்னர் இப்ராஹிம் செனகலுக்காக ஒரு கோல் அடித்தார். இதுவரை உலகக் கிண்ணத்தில் அடித்த கோல்களை பின்னுக்குத் தள்ளி எம்பாப்பே கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடித்தார். 30 யார்டுகள் தொலைவில் இருந்து பந்தை எடுத்துச் சென்று அற்புதமான நீண்ட தூர ஷாட்டை மேல் மூலையில் செலுத்தி ஆட்டத்தின் சிறந்த கோல்களில் ஒன்றாக மாற்றினார். கிலியன் எம்பாப்பே தனது அபாரமான இரட்டை கோல்களால் உலகக் கிண்ண வரலாற்றில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார். பிரான்ஸ் தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்த இரண்டு கோல்களுடன் 27 வயதான எம்பாப்பே உலகக் கிண்ணத்தில் போட்டிகளில் தனது மொத்த கோல்களின் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தி மேற்கு ஜெர்மனியின் ஜாம்பவான் கெர்ட் முல்லர் சாதனையை சமன் செய்தார். உலகக் கிண்ணத்தில் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அதிக கோல் பதிவு செய்தவர்கள் வரிசையில் அவருக்கு முன்னால் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோஸ் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி தலா 16 கோல்களுடனும் பிரேசிலின் ரொனால்டோ நசாரியோ 15 கோல்களுடனும் உள்ளனர். 38 வயதிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லியோனல் மெஸ்சி தற்போது குளோஸின் சாதனையை சமன் செய்துள்ள நிலையில் இந்த உலகக் கிண்ண தொடரிலேயே 17 ஆவது கோலை பதிவு செய்து புதிய உலக சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு போட்டியில் நோர்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தியது. நார்வேயின் வெற்றிக்கு எர்லிங் ஹாலண்ட் வித்திட்டார். ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் ஒரு கோலும் முதல் பாதியின் இறுதியில் மற்றுமொரு கோலும் அடித்து அசத்தினார். நார்வே சார்பாக லியோ ஓஸ்டிகார்ட் ஒரு கோலை அடித்ததுடன் ஈராக் அணியின் ஐமென் ஹுசைன் ஒரு ‘ஓன்-கோல்’ அடித்ததன் மூலம் நார்வேயின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஈராக் சார்பில் ஐமென் ஹுசைன் ஒரு கோலை அடித்திருந்தார்.

