Wednesday, May 13, 2026 12:47 pm
நடப்பு ஐபிஎல் சீசனின் 56-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியைப்பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன் 44 பந்துகளில் 61 ஓட்டங்களும் வொஷிங்டன் சுந்தர் 33 பந்துகளில் 50 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். இவர்களின் விடாமுயற்சியான அரைசதங்களின் உதவியுடன் 168 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என்ற இலக்கை பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஆரம்பத்தில் சில பின்னடைவுகள் காணப்பட்ட போதிலும் இந்த ஜோடி கடினமான ஆடுகளத்தில் ஒரு சவாலான ஓட்டங்களை உறுதிசெய்தது.
ஹைதராபாத் அணியின் பிரஃபுல் ஹிங்கே 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே போன்று அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் 20 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
169 ரன்கள் என்ற இலக்கை விரட்டி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குஜராத்தின் சிறப்பான பந்துவீச்சினால் 14.5 ஓவர்களில் 86 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.
5.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தடுமாறியது.
ககிசோ ரபாடா 28 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது புதிய பந்து வீச்சு உத்தி மூலம் முன்னணி வரிசை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆரம்பத்திலேயே தடுமாற வைத்தார்.
ஜேசன் ஹோல்டர் பவர்பிளேக்குப் பின்னர் 20 பந்துகளில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இவர்களின் அபாரமான பந்து வீச்சுக்களினால் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வரிசை விரைவாகச் சரிந்தது.
டிராவிஸ் ஹெட் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
நிதிஷ் குமார் ரெட்டியும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் படுமோசமான துடுப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ஹைதராபாத் அணி 60 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
போட்டியின் ஆட்டநாயகனாக ககிசோ ரபாடா தெரிவானார்.
இந்த அணிகள் இரண்டும் இந்த சீசனில் மோதிக்கொண்டது இதுவே முதல்முறை. இதில் வெற்றி பெறும் அணிக்கு 16 புள்ளிகள். ப்ளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி. இப்படியான சூழ்நிலையில்தான் இரு அணிகளும் நேற்று மோதிக்கொண்டன.
சாய் சுதர்ஷன் சுப்மன் கில் இருவருமே இந்த சீசனில் நானூறு ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள். 14வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதம் அடைந்த சாய் சுதர்ஷன் இந்த சீசனில் அடிக்கும் ஆறாவது அரைசதம் ஆகும்.
சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அதில் ஒன்றிலாவது பெருவெற்றி பெறவேண்டும். இரண்டு போட்டிகளுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கான சக போட்டியாளர்களாக இருக்கும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளோடு நடக்க உள்ளது. இந்த போட்டிகளின் முடிவுதான் எந்த இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதைத் தீர்மானிக்கப்போகின்றன.
பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷல் படேல் என டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் எல்லாம் இந்த சீசனில் தடுமாறிக்கொண்ண்டிருக்க சிராஜ், ப்ரஷித் கிருஷ்ணா, ரபாடா, ஹோல்டர் என டெஸ்ட் பவுலர்கள் இந்த சீசனில் முக்கியமாக பவர்ப்ளேயில் விக்கெட்களை குவிக்கிறார்கள்.
ரபாடா ஒருவர் மட்டும் இந்த சீசனில் 16 விக்கெட்களை பவர்ப்ளேயில் எடுத்திருக்கிறார். முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்கள் ஆட்டமாகவே மாறிவிட்ட டி20யில் தங்களுக்கான ஆயுதம் ஒன்றை கண்டறிந்திருக்கிறார்கள் பவுலர்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்த குறைந்தபட்ச ரன்களாக நேற்று பெற்ற ஓட்டங்கள் அமைந்தன. அதோடு குஜராத் அணிக்கு இது அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற ஆட்டமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். 12 ஆட்டங்களில் 8 வெற்றி 4 தோல்வி உடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி. அடுத்தடுத்த இடஙக்ளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.

