Wednesday, June 24, 2026 2:34 pm
2026 FIFA உலகக்கோப்பை தொடரில் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.
2026 FIFA உலகக் கிண்ணத்தின் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய போர்த்துக்கல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
போட்டியின் 6-வது நிமிடத்திலேயே போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 39-வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். இந்த கோல்களின் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஆறு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் கோல் அடித்த இரண்டாவது வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் ரோஜர் மில்லா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 1994 உலகக்கோப்பையில் கமரூன் அணிக்காக கோல் அடித்தபோது அவர் 42 வயதை கடந்திருந்தார்.
41 வயதிலும் சர்வதேச அரங்கில் தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ரொனால்டோ உலகக் கோப்பை வரலாற்றில் மேலும் ஒரு சாதனையை தனது பெயரில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

