Monday, May 11, 2026 7:05 pm
தமிழக சட்டசபையின் சபாநாயகராக ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் தேர்தலுக்கான மனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தவெக சார்பில் சபாநாயகராகபோட்டியிடுவதற்கான மனுவை சட்டசபை செயலாளர் சீனுவாசனிடம் வழங்கினார். அப்போது முதல்வர் விஜய்யும் உடனிருந்தார். பிரபாகரை எதிர்த்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர் யாரேனும் போட்டிக்கு ஒரு சபாநாயகரை நிறுத்தினால் நாளை சட்டசபை சபாநாயகருக்கான தேர்தல், குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும், இதுதான் நடைமுறை. ஆனால் சபாநாயகர் தேர்தலுக்காக எதிர்க்கட்சி சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மனு தாக்கலுக்கான நேரமும் முடிவடைந்துவிட்டது. இதனால் ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் காலத்து அரசியல் முகங்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் ஜேசிடி பிரபாகர். சென்னையைச் சேர்ந்த இவர் அதிமுகவில் அமைப்புச் செயலாளராக இருந்தார். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டஜே.சி.டி.பிரபாகரன் ஓபிஎஸ் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார். பின்னர் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்தார். இதையடுத்து அந்த குழுவைவிட்டுவிட்டு விஜய்யின் தவெகவில் கடந்த ஜனவரி மாதம் இணைந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவர் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
,

