Monday, May 11, 2026 3:12 pm
அமெரிக்காவிற்கு மீன் மற்றும் மீன் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும்போது அந்நாட்டின் “கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்” (Marine Mammal Protection Act – MMPA) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
இதன்மூலம் இலங்கையின் குறிப்பிட்ட நண்டுகளை (Blue Swimming Crab) அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கு நிலவிய தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் National Oceanic and Atmospheric Administration – NOAA, இலங்கையின் நண்டு பிடிமுறை மற்றும் அது தொடர்பான ஒழுங்குமுறைகள் அமெரிக்கத் தரத்திற்கு இணையானவை (Comparable in effectiveness) என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2025 நவம்பர் மாதம் அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பொன்றின் காரணமாக இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனினும், கடற்றொழில் திணைக்களம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் ஏனைய தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிவியல் தரவுகள் மற்றும் ஆதாரங்களைக் கருத்திற்கொண்டு, NOAA நிறுவனம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த வெற்றியானது நாட்டின் மீனவ சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், வெளிநாட்டு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் பெரும் பக்கபலமாக அமையும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

