Sunday, May 10, 2026 1:47 pm
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ச ஜோசப் விஜய் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, முதல் கையெழுத்தை பதவியேற்பு விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டு அரங்கிலேயே போட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பதவியேற்பு விழா நடந்த மேடையிலேயே மக்கள் நலன் தொடர்பான முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.
முதல் கையெழுத்து: 500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்ட கோப்பில் முதலில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கும் கோப்பிலும், மாநிலம் , மாவட்டம் தோறும் போதைப்பொருள் ஒழிப்பு தனிப்படைகள் அமைப்பதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.வழக்கமாக புதிதாக பதவியேற்கும் முதலமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்குச் சென்று முதல் உத்தரவில் கையெழுத்திடுவது மரபாக இருந்து வந்த நிலையில், விஜய் அந்த மரபை மாற்றி பதவியேற்ற அரங்கிலேயே கையெழுத்திட்டது அவரது புதிய அரசியல் பாணியாக பார்க்கப்படுகிறது.அதைத்தொடர்ந்து பேசிய விஜய், தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளனர். கஜனாவை சுத்தமாக காலி செய்து வைத்து இருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழ்நிலையில்தான் இந்த பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். அரசிடம் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது பற்றி வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிடுகிறேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இல்லாமல் செயல்படுவேன் என்றார்.

