Friday, May 1, 2026 10:24 am
“உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்” என மேதின வாழ்த்துச் செய்தியை ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும் கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமை மிக்க போராட்டத்தின் கதையாகும்.
1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து, இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த சக்தியாக எழுந்து நின்றனர். A.E குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமான தொழிற்சங்க இயக்கத்தின் வழி வந்த தொழிலாளர் குரல், அரசியல் ரீதியாகப் பலம்பெற்றது.
1923ஆம் ஆண்டின் ரயில்வே வேலைநிறுத்தம், 1947ஆம் ஆண்டின் அரச சேவை வேலைநிறுத்தம் போன்ற தீர்க்கமான திருப்புமுனைகள், “இந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் முன்னோடிகள் உழைக்கும் மக்களே” என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தின. அன்று தொட்டு இன்று வரை தோட்டத்துறை, துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட அனைத்து அரச மற்றும் தனியார் துறை தொழிலாளர்களும் ஆற்றிய பங்களிப்பு இன்று நாம் அனுபவிக்கும் பல தொழில்சார் உரிமைகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றது என்பதைப் பெருமையுடன் நினைவுகூறுகின்றேன்.
உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அதற்கமைய நடைமுறையிலுள்ள சேவைகளை விரிவுபடுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான மற்றும் பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க வேண்டுமென நாம் உறுதிபூண்டுள்ளோம்.
அனைத்து விதமான உழைப்பையும் மதிக்கின்ற, உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, சமத்துவமிக்க ஒரு நாட்டை உருவாக்குவதற்காக ஒன்றுபட்டு முன்னேறுவதன் முக்கியத்துவத்தை இந்த மே தினத்தில் நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து உழைக்கும் மக்களின் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு மூலம், நம் அனைவரதும் பொதுவான இலக்கான, “வளமான நாடு ,அழகான வாழ்க்கை” என்பதை மிக விரைவில் அடைவதற்குரிய வலிமை கிடைக்கவேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
என்ற கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

