Tuesday, April 28, 2026 9:32 am
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு முடிந்த நிலையில் தவெக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு சென்று சாமி தரிசனம் செய்திருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் தலைவர்களும் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். அவரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார். இந்நிலையில்தான், தவெக தலைவர் விஜய் திருச்செந்தூருக்கு சென்று சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
இதற்காக நேற்று இரவு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து விஜய் விமான நிலையம் சென்றார். அங்கிருந்து அவர் தனி விமானம் மூலம் மதுரைக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் அவர் திருச்செந்தூருக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் வந்தார். அப்போது அவரை பார்க்க கூட்டம் கூடியிருந்தது. விஜய் வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்த விஜய் அதன்பின் ஒரு துண்டு மட்டும் அணிந்து சுப்பிரமணிய கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பாக அவருக்கு பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. அதோடு அவருக்கு வெற்றிவேலும் பரிசாக வழங்கப்பட்டது. அதன்பின் கடற்கரைக்கும் சென்று விஜய் வழிபட்டார்.இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

