Tuesday, April 28, 2026 10:10 am
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைச் கடத்தி வந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை வழிநடத்திய பிரதான பிக்குவை மே 2-ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 22 பிக்குகளும் இன்று செவ்வாய்க்கிழமை (28.04.2026) மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம்முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் கும்பலை வழிநடத்திய பிரதான நபரான “கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்யாலங்காராம” விகாரையைச் சேர்ந்த ‘அகுணுகொலே அமிதானந்த’ எனும் பிக்கு, விமான நிலையத்தில் போதைப்பொருள் சிக்கியதைக் கண்டு அங்கிருந்து தப்பிச் சென்று மிரிஸ்வத்தை பகுதியில் மறைந்திருந்த வேளை பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை மூலம் நேற்று திற்கட்கிழமை (27.04.2026) கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட அமிதானந்த பிக்கு, போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இக் கடத்தல் நடவடிக்கையை ஒருங்கிணைக்க ஒரு ‘whatsapp’ குழுவை இவரே இயக்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கொழும்பு போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர், இச் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

