Saturday, April 18, 2026 2:40 pm
தாய்லாந்தின் தம்மசாத் மைதானத்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆசிய மகளிர் கிண்ண சம்பியன் அரை இறுதிப் போட்டியில் சீனாவை எதிர்த்து விளையாடிய ஜப்பான் 2 – 0 கோல்கணகில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், ஐந்தாவது நிமிடத்தில் மாவோ இட்டமுரா தனது வலது காலால் உதைத்து ஜப்பானுக்கு ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து, 24வது நிமிடத்தில் நோவா ஃபுகுஷிமா தனது வலது காலால் உதைத்த ஃப்ரீ கிக் மூலம் இரண்டாவது கோல் அடிக்கப்பட்டது.
ஆட்டத்தின் பெரும்பகுதியை ஜப்பான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், இரண்டாம் பாதியில் சீன கோல்கீப்பர் லியு சென் பல முயற்சிகளைத் தடுத்து, தனது அணியைப் போட்டியில் தக்கவைத்துக் கொண்டார். இறுதி விசில் ஒலிப்பதற்குச் சற்று முன்பு சீனாவின் சிறந்த வாய்ப்பு கிடைத்தது, ஆனால் லு ஜியாயு அதை கோலாக மாற்றத் தவறினார்.
தோல்வியடைந்த போதிலும், ஏப்ரல் 11 ஆம் திகதி காலிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், போலந்தில் நடைபெறும் FIFA U20 மகளிர் உலகக் கிண்ணப் போட்டிக்கு சீனா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.
ஆறு முறை 20 வயதுக்குட்பட்ட மகளிர் ஆசியக் கிண்ண சம்பியனான ஜப்பான், சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான வட கொரியாவை (DPRK) எதிர்கொள்ளும். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வட கொரியா, தென் கொரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

