Thursday, November 5, 2026 7:44 pm
அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே நடந்த தாக்குதலில் ஜோர்தானியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை அதிகாரிகள் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை (05) பிற்பகல் சுமார் 12.20 மணியளவில், தூதரகக் கட்டிடத்திற்கு அருகில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கூர்மையான ஆயுதத்துடன் வந்த நபர் தாக்கியதாக இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியது.
கார்ப்பரல் ஜவாத் அலி கலஃப் அல்-சலைதா என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, தனது அலுவல் பணிகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.
ஜோர்தானின் பொதுப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் (PSD) கூற்றுப்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்துப் படையின் தளபதி, மோதலின் போது முகத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அங்கு அவரது உடல்நிலை சீராக உள்ளது.
பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த சந்தேக நபர் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜோர்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் முறைப்படி ஒரு பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு அதிகாரி தலையிடுவதற்கு முன்பு, தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்ட அதிகாரியின் ஆயுதத்தைப் பறிக்க முயன்றதாக ஜோர்தானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தூதரகம் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
அம்மானில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகப் பணியாளர்கள் அனைவரும் மற்றும் ஜோர்தானில் உள்ள இலங்கைச் சமூகத்தினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என உறுதிப்படுத்தியுள்ளது.மறைந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
ஜோர்தானுக்கான இலங்கைத் தூதர் விஸ்வநாத் அப்போன்சு, தூதரக அதிகாரிகள், ஜோர்தானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

