Sunday, November 8, 2026 4:43 pm
மொஸ்கோவில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் வென்ற ஹொக்கி தங்கப் பதக்கம், 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வெள்ளிப் பதக்கம், 1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் , 1982 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் வென்ற வெண்கலப் பதக்கங்கள் ஆகியன திருடப்பட்டதாக முன்னாள் ஹொக்கி வீரர் எம்.எம். சோமயா புகார் செய்துள்ளார்.
திருட்டுச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் காலவரையறைக்குட்பட்ட விசாரணை நடத்த தலையிடுமாறு கோரி, எம்.எம். சோமயா கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள நியூ திப்பசந்திராவில் வசிக்கும் முன்னாள் இந்திய ஹொக்கி நட்சத்திரம் எம்.எம். சோமயாவின் இல்லத்திற்குள் புகுந்த திருடர்கள் , அவரது மதிப்புமிக்க 1980 மொஸ்கோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம், பிற சர்வதேச விளையாட்டுப் பதக்கங்கள், நகைகள் ,சிறிதளவு பணத்தையும் திருடிச் சென்றனர்.
அக்டோபர் 28 ஆம் திகதி அதிகாலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம், குடும்பத்தினர் கொடகு மாவட்டத்திலிருந்து திரும்பிய பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.
1980, 1984 , 1988-ஆம் ஆண்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய, மும்முறை ஒலிம்பிக் வீரரான சோமயா, 1988 சியோல் ஒலிம்பிக்கில் இந்திய ஒலிம்பிக் ஹொக்கி அணிக்குத் தலைமை தாங்கினார். அவருக்கு 1985-ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
“திருடப்பட்ட பதக்கங்களில் ஒன்று, ஆடவர் ஹாக்கியில் இந்தியா வென்ற கடைசி ஒலிம்பிக் தங்கப் பதக்கமாகும். எனவே, இது தனிப்பட்ட முறையில் எனக்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் இந்திய விளையாட்டு வரலாற்றிற்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. என்னைப் பொறுத்தவரை, இது நாட்டிற்காக நான் ஆற்றிய பல ஆண்டுகால அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவையின் ஈடு செய்ய முடியாத சின்னமாகும்,” என்று சோமயா கூறினார்.
1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் ஒரு பகுதியாக சோமயா வென்ற தங்கப் பதக்கம், 1982-ல் புது தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வெள்ளிப் பதக்கம், 1986-ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வெண்கலப் பதக்கம், மற்றும் 1982-ல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் வென்ற மற்றொரு வெண்கலப் பதக்கம் ஆகியவையும் திருடப்பட்டன.
கொள்ளையர்கள் வெள்ளிக் கோப்பைகள், வளையல்கள் உள்ளிட்ட தங்க நகைகள், வெள்ளிக் கரண்டிகள், தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 30,000 ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றனர். திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ₹3.53 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

