Saturday, November 7, 2026 3:43 pm
அமெரிக்க கடற்படையின் MV-22B ஆஸ்ப்ரே (MV-22B Osprey) ரக விமானம் ஒன்று, இன்று பிற்பகல் சனிக்கிழமை (07) கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இது இந்தியப் பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பலிலிருந்து புறப்பட்டு வந்துள்ளது.
போயிங் (Boeing) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானம், ஹெலிகாப்டர் , நிலையான இறக்கை கொண்ட விமானம் (fixed-wing aircraft) ஆகிய இரண்டின் செயல்பாடுகளையும் கொண்டதாகும். இது செங்குத்தாக மேலே எழும்பி தரையிறங்கும் திறன்,வழக்கமான விமானங்களின் வேகம், நீண்ட தூரம் பயணிக்கும் திறன் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கிறது.
இதன் ரோட்டர்கள் (rotors) மேல்நோக்கிச் சாய்வதன் மூலம் ஹெலிகாப்டரைப் போல செங்குத்தாக மேலே எழும்பவும் தரையிறங்கவும் முடியும்; அதே சமயம், அவை முன்னோக்கிச் சாய்வதன் மூலம் வழக்கமான விமானத்தைப் போலச் செயல்படவும் முடியும். இதனால், இந்த ஆஸ்ப்ரே விமானம் இயங்குவதற்கு பாரம்பரிய ஓடுபாதை (runway) தேவையில்லை.
இந்த விமானம், இலங்கைக்குத் தெற்கே சுமார் 50 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த அமெரிக்க கடற்படை கப்பலிலிருந்து புறப்பட்டு வந்தது. இது இன்று பிற்பகல் மீண்டும் அந்த கப்பலுக்கே திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

