Sunday, November 8, 2026 1:22 pm
டெங்கு பாதிப்பு அபாயம் அதிகம் உள்ள 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில், நவம்பர் 9 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ‘தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்’ நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, பொது நிர்வாக அமைச்சு, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைப்புகள், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலகம், பொலிஸ், முப்படைகள், தன்னார்வ அமைப்புகள் ஆகியன இணைந்து செயல்படவுள்ளன.
ஆறு நாட்கள் நடைபெறும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நுளம்பு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழிப்பதற்காகக் கூட்டு ஆய்வுக் குழுக்கள் களமிறக்கப்படவுள்ளன; குறிப்பாக, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும், பாடசாலைகள், பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் சிறப்புச் சுத்தப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

