Sunday, November 8, 2026 4:30 pm
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போவில் நடைபெற்ற IWF உலக பளுதூக்குதல் சம்பியன்ஷிப் போட்டியில், பல்கேரியாவின் கார்லோஸ் நாசர், ஆண்களுக்கான 95 கிலோ எடைப்பிரிவில் மூன்று உலக சாதனைகளை முறியடித்து, உலக பளுதூக்குதல் சம்பியன்ஷிப் போட்டியில் தனது நான்காவது உலக பட்டத்தைக் கைப்பற்றினார்.
21 வயதான, 2024 ஒலிம்பிக் சம்பியனான இவர், முன்னதாக 89 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டவர். தற்போது 95 கிலோ நிறைப்பிரிவிற்கு மாறியுள்ள அவர், ‘ஸ்நாட்ச்’ (snatch) முறையில் 185 கிலோவையும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ (clean and jerk) முறையில் 230 கிலோவையும் தூக்கி, மொத்தம் 415 கிலோ நிறையுடன் முதலிடம் பிடித்தார். இது, இரண்டாவது இடத்தைப் பிடித்த கஜகஸ்தானின் நுர்கிசா அடிலெதுலியை விட 16 கிலோ அதிகம் ஆகும்.
நாசர் தான் பங்கேற்ற ஆறு முயற்சிகளிலும் வெற்றி பெற்றார். ‘ஸ்நாட்ச்’ முறையில் 175 கிலோ, 180 கிலோ, 185 கிலோநிறைகளைத் தூக்கிய அவர், தொடர்ந்து ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 213 கிலோ, 220 கிலோ , 230 கிலோ நிறைகளை வெற்றிகரமாகத் தூக்கினார்.
அவரது இறுதி ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முயற்சி, இதற்கு முந்தைய உலக சதனையான 220 கிலோவை முறியடித்தது. அதேபோல், அவர் தூக்கிய மொத்த நிறையானது, கடந்த செப்டம்பர் மாதம் அலி அலிபூர் படைத்த 398 கிலோ என்ற உலக சாதனையை விஞ்சியது.
இந்த வெற்றி நசாருக்கு அவரது நான்காவது உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்ததுடன், பளுதூக்கும் விளையாட்டின் முன்னணி வீரர்களில் ஒருவராக அவரது இடத்தையும் மேலும் உறுதிப்படுத்தியது.
நிங்போவில் நடைபெற்ற இந்தச் சம்பியன்ஷிப் போட்டி, 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றின் தொடக்க நிகழ்வாக அமைந்தது.

