Thursday, November 5, 2026 6:49 pm
1,000 சிசி-க்கு மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களை, விளையாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட சிறப்பு நோக்கங்களுக்காக அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நேற்று புதன்கிழமை[4] பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தை ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் துணை அமைச்சர் தெரிவித்தார்.
1,000cc-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருகிறதா என பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
கடுமையான விதிமுறைகளின் கீழ், குறிப்பாக நியமிக்கப்பட்ட பந்தயத் தடங்கள் அல்லது பிற பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதற்காக, அத்தகைய மோட்டார் சைக்கிள்களை அனுமதிக்க முடியுமா என்றும் அவர் வினவினார்.
தற்போது பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களைக் குறிப்பிட்டு, அவற்றை விடுவிக்க ஏற்பாடுகள் செய்ய முடியுமா என்று ரத்நாயக்க மேலும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் குணசேன, குழுவின் பரிந்துரைகளைப் பெற்ற பின்னர் தேவையான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும் என்று தெரிவித்தார்.

