Tuesday, May 5, 2026 4:58 pm
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தமிழக வெற்றி கழகம் வரலாற்று சாதனை படைத்திருந்தாலும், மாநிலத்தின் 8 மாவட்டங்களில் அக்கட்சியால் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. சென்னை ,கோவை போன்ற முக்கிய நகரங்களில் திமுக மற்றும் அதிமுகவின் கோட்டைகளை தகர்த்த தவெக, தென் தமிழகத்தின் தென்காசி ,கன்னியாகுமரி மாவட்டங்களில் முழுமையாக பின் தங்கியுள்ளது.
தென்காசி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 11 தொகுதிகளில் திமுக ,அதிமுக மட்டுமே வெற்றியை பகிர்ந்து கொண்டுள்ளன. திமுக பெற்றுள்ள 73 தொகுதிகளில் இந்த இரு மாவட்டங்களின் பங்களிப்பு மிக அதிகம். இது தவிர அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, திருவாரூர்,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் தவெக இன்னும் தனது கணக்கைத் தொடங்கவில்லை.
மொத்தம் 108 தொகுதிகளில் வென்று, சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயாராகி வரும் வேளையில், இந்த 8 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தோல்வி தவெக-வின் தென் மண்டலச் செல்வாக்கை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது. குறிப்பாக, விழுப்புரத்தில் 7 இடங்களையும் திமுக, அதிமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளது தவெக-விற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

