Wednesday, November 18, 2026 11:55 am
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் கெஷ்ம் தீவில் இருந்த ஏவுகணைத் தளம் மீது அமெரிக்க இராணுவம் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்துத் தெரிவித்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர், இந்தத் தாக்குதலை “தற்காப்பு நடவடிக்கை” என்று விவரித்தார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC), அமெரிக்க பணியாளர்கள் ,சொத்துகளைக் குறிவைத்து நடத்திய ஆக்ரோஷமான செயலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, அந்த அதிகாரியைக் மேற்கோள் காட்டி ‘சிபிஎஸ் நியூஸ்’ (CBS News) செய்தி வெளியிட்டுள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (U.S. Central Command) தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய மூன்றாவது தாக்குதல் முயற்சி இது என்றும், அந்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன என்றும் ‘சிபிஎஸ் நியூஸ்’ செய்தி தெரிவிக்கிறது.
ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘ஐஆர்என்ஏ’ (IRNA), ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை ஆளுநர் அகமது நஃபிசியை மேற்கோள் காட்டி, கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலால் குடியிருப்பு, வணிகம் அல்லது உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

