Wednesday, November 18, 2026 3:49 pm
முறையற்ற தூதரக கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது.
சசி வீரவன்ச குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100,000 ரூபா அபராதமும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி விதிக்கப்பட்டது.
தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து, அவர் பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி அவரது மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்தது.
அதன்பின் அவர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.அவரது மேல்முறையீட்டைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து, அவரது குற்றத்தீர்ப்பையும் இரண்டு வருட சிறைத் தண்டனையையும் உறுதி செய்தது.

