Tuesday, September 22, 2026 1:16 pm
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரான் விமான சேவைகள் சர்வதேச அளவில் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
ஈரானிய விமானங்களுக்கு எரிபொருள், தரைவழி சேவைகள் அல்லது டிக்கெட் விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் , விமான நிலையங்கள் மீது அமெரிக்கா கடுமையான இரண்டாம் நிலை தடைகளை விதிக்கவுள்ளது. இந்தத் தடைகளை மீறும் நிறுவனங்கள் அமெரிக்க டொலர் அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா , இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல்களால் கடந்த பெப்ரவரி முதல் அமெரிக்கா-ஈரான் இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. வாஷிங்டனின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானிய விமானங்களின் சேவைகளை ஈராக் , ஜோர்ஜியா போன்ற நாடுகள் நிறுத்தியுள்ளன.
துருக்கி அரசுகளின் கோரிக்கையை ஏற்று மாஹன் ஏர் நிறுவனமும் தனது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஈரானின் பொருளாதார மற்றும் ராஜதந்திர கூட்டாளியான சீனாவுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

