Friday, November 6, 2026 2:27 pm
தீபாவளியை முன்னிட்டு சூர்யாவின் சீன் , நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால் இந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபீஸ் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். பண்டிகை விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதை ரசிகர்கள் எப்போதுமே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், நவம்பர் 5 ,6ஆம் திகதிகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகத் தயாராகி வருகின்றன. சூர்யாவின் சீன் , நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 , விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி , ஆகிய திரைப்படங்கள் தீபாவளி வெளியீட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ளன. இந்தியில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.
தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்தியில் உருவாகியுள்ள பிரமாண்டமான ‘ராமாயணா’ திரைப்படமும் இந்த தீபாவளிக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படங்களில் ஒன்றாக உள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்திய இதிகாசமான ராமாயணத்தை நவீன தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமான திரைப்படமாக உருவாக்கியிருப்பதால் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.குறிப்பாக சாய் பல்லவி நடித்திருப்பதால் தமிழ் ரசிகர்களிடையேயும் இந்தப் படத்திற்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிப் போட்டியில் சீன் , மூக்குத்தி அம்மன் 2 ஆகிய இரண்டு படங்களுக்கிடையே நேரடிப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்து, ஜித்து மாதவனின் வித்தியாசமான இயக்கம், நஸ்ரியாவின் வருகை ஆகியவை சீன் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. மறுபுறம் நயன்தாராவின் அம்மன் கதாபாத்திரம், சுந்தர்.சியின் இயக்கம், பிரமாண்டமான தயாரிப்பு ஆகியவை மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு சாதகமாக அமையலாம்.
தமிழகத்தில் புதிய திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் காலை 6 மணி முதல் காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் தீபாவளிப் படங்களின் வசூல் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

