Friday, November 6, 2026 2:00 pm
பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி , செலவுகளை குறைக்கும் பொருட்டு தனது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருடாந்திர செலவுகளில் 20 சதவீதத்தை குறைக்க வழிகளை கண்டறியுமாறு முகாமையாளர்களுக்கு டிஸ்னி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை டிஸ்னியின் தீம் பார்க் , தொலைக்காட்சித்துறை , திரைப்பட ஸ்டுடியோக்கள் உட்படப் பல்வேறு பிரிவுகளையும் கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி அதிகரித்து வரும் சூழலில், திரைப்படங்கள், தொழில்நுட்பம், தீம் பார்க் , ஸ்ட்ரீமிங் சேவைகளில் அதிக முதலீடு செய்வதற்காகவே இந்த செலவு குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்ரல், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் டிஸ்னி நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியத் தொலைக்காட்சி மூலமான வருவாய் குறைந்து வருவதாலும், ஓடிடி தளங்களுக்கிடையேயான கடுமையான போட்டியினாலும் பொழுதுபோக்கு துறை பெரும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திச் செலவுகளை கட்டுப்படுத்த டிஸ்னி திட்டமிட்டுள்ளது.

