Monday, October 5, 2026 9:10 am
இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவது தொடர்பாக அமெரிக்கா இலங்கை மீது அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவல்களை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மறுத்துள்ளார்.
இலங்கையின் மூலோபாய அமைவிடம் காரணமாக, பெருமளவிலான சர்வதேசக் கப்பல்கள் நாட்டின் கடற்பரப்புக்கு அருகிலுள்ள கடல் வழித்தடங்களைப் பயன்படுத்துவதாகவும், தேவைப்படும்போது அத்தகைய கப்பல்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு,ளவாட உதவிகள் வழங்கப்படுவதாகவும் ஹேரத் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் சூழலால் ஏற்பட்ட கப்பல் போக்குவரத்து தொடர்பான சவால்கள் காரணமாக, தற்போது சுமார் 47 கப்பல்கள் இலங்கையின் 12 கடல் மைல் எல்லைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இவற்றில் சுமார் 19 கப்பல்கள் ஈரானியக் கப்பல்கள் ஆகும்; இவை இப்பகுதியில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகின்றன.
வெளிநாட்டுத் தலையீடு குறித்த செய்திகள் குறித்துப் பேசிய ஹேரத், இந்தக் கப்பல்கள் விவகாரத்தில் அமெரிக்கா எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை அல்லது இலங்கை அரசாங்கத்தின் மீது எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியாது என்றும், முடிவுகளை எடுப்பதில் தனது இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய அடையாளம் ஆகியவற்றைக் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு இணங்கி நடப்பதோடு, மனிதாபிமானத் தேவைகளை பொறுப்புடன் நிறைவேற்றும் அதேவேளையில், அரசாங்கம் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேசத் தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு அரசாங்கம் எந்தவொரு பொருட்களையோ அல்லது விநியோகங்களையோ வழங்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். அத்தகைய கப்பல்களுக்குத் தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கினால், அது தொடர்பான சட்டத் தேவைகளைப் புரிந்துகொள்வதும், உரிய கவனத்துடன் செயல்படுவதும் அந்த நிறுவனங்களின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
“அமெரிக்கா தடைகளை விதித்திருக்கும் நிலையில், ஒரு அரசாங்கமாக நாங்கள் அத்தகைய தடைக்குள்ளான கப்பல்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லவோ அல்லது விநியோகங்களை வழங்கவோ இல்லை. தனியார் துறையைச் சேர்ந்த சிலர் அத்தகைய பல்வேறு கப்பல்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் வழங்கினால், நிலவும் சூழலைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் செயல்படுவது அவர்களின் பொறுப்பாகும். ஒரு அரசாங்கமாக, நாங்கள் சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு இணங்கவே செயல்படுகிறோம்” என்றார்.

