Friday, November 20, 2026 2:23 pm
இலங்கையின் பணவீக்க விகிதம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 9 சதவீதத்தையோ அல்லது அதைவிடச் சற்று அதிகமான அளவையோ எட்டக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று வெள்ளிக்க்கிழமை (20) எச்சரித்துள்ளார்.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஆளுநர், அக்டோபர் 2026-ல் பணவீக்கம் ஏற்கனவே 8.3 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், இது முன்னதாகக் கணிக்கப்பட்ட அளவை விட அதிகம் என்றும் தெரிவித்தார்.
எதிர்பார்த்ததை விட பணவீக்கம் அதிகரித்தமைக்கு, மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் , உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்வாக இருப்பதுதான் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
2026 மே மாதம் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியபோது, பணவீக்கம் சுமார் 7 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்து, அதன் பிறகு படிப்படியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டிருந்ததாக ஆளுநர் விளக்கினார்.
இருப்பினும், மத்திய கிழக்கிலான மோதல் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்ததாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்வாக இருந்ததாலும், பணவீக்கம் அந்த முன்னறிவிப்புகளைத் தாண்டி அதிகரித்துள்ளது.
“இந்த மோதல் குறுகிய காலமே நீடிக்கும் என்றும், அதன் பிறகு கச்சா எண்ணெய் விலைகள் நிலைபெறும் என்றும் நாங்கள் எதிர்பார்த்தோம். இருப்பினும், சமீப காலம் வரை கச்சா எண்ணெய் விலைகள் உயர்வாகவே இருந்தன; இது பணவீக்கம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உயரக் காரணமாக அமைந்தது,” என்று அவர் கூறினார்.
அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் சுமார் 9 சதவீதத்தை அல்லது அதற்குச் சற்று அதிகமான அளவை எட்டக்கூடும் என்று தற்போதைய கணிப்புகள் காட்டுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
வரவிருக்கும் மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்றாலும், 2027-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அது படிப்படியாகக் குறைந்து, 5 சதவீத இலக்கை நோக்கிச் செல்லும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
பணவீக்கத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இலக்கு மட்டத்திற்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய வீரசிங்க, தொடர்ந்து நீடிக்கும் உயர் பணவீக்கம் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும், அவர்களின் வாங்கும் திறனையும் மோசமாகப் பாதிக்கும் என்று எச்சரித்தார்

