Friday, November 20, 2026 2:36 pm
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கிரிக்கெட் இயக்குநராக மஹேல ஜெயவர்தன, நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது புதிய பொறுப்பில், ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் பெரும்பான்மை அல்லது கட்டுப்பாட்டுப் பங்குகளைக் கொண்டுள்ள ஐஎல்டி20 தொடரில் துபாய் கேப்பிட்டல்ஸ் ,தி ஹன்ட்ரட் தொடரில் சதர்ன் பிரேவ் உள்ளிட்ட அனைத்து அணிகளிலும் ஜெயவர்தன கிரிக்கெட் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார். அவர் ஹாம்ப்ஷயர் கிரிக்கெட்டுடனும் இணைந்து பணியாற்றுவார்.
ஒவ்வொரு அணியின் துணை ஊழியர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதுடன், கிரிக்கெட் உத்தி, அணியின் செயல்திறன் மற்றும் திறமை மேம்பாடு ஆகியவற்றை மேற்பார்வையிடுவதும் அவரது பொறுப்புகளில் அடங்கும். இந்த நியமனத்தின் மூலம், 2027 , 2028 சீசன்களில் மகளிர் பிரீமியர் லீக்கில் (WPL) டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியையும் ஜெயவர்தன மேற்பார்வையிடுவார்.
ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் , ஜேஎஸ் டபிள்யூ குழுமம் இணைந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆண்கள்,பெண்கள் அணிகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளன. இவ்விரு குழுக்களும் இரண்டு ஆண்டு சுழற்சி முறையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை மாறி மாறிப் பகிர்ந்து கொள்கின்றன. ஜேஎஸ் டபிள்யூ குழுமம் 2027 , 2028-ஆம் ஆண்டுகளில் ஆண்கள் ஐபிஎல் அணியை நிர்வகிக்கும், அதே காலகட்டத்தில் ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் பெண்கள் அணியை மேற்பார்வையிடும்.
2026 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஜெயவர்தன டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைகிறார். இதற்கு முன்பு அவர் 2012 ,2013-ஆம் ஆண்டுகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக வீரராக விளையாடியுள்ளார்.
அவரது நியமனத்தைத் தொடர்ந்து, ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் தனது முன்னாள் கிரிக்கெட் இயக்குநர் வேணுகோபால் ராவ் ,பந்துவீச்சுப் பயிற்சியாளர் முனாஃப் படேல் ஆகியோரைப் பிரிந்துள்ளது.
ஜெயவர்தனவின் முதல் பணி, நவம்பர் 21 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ILT20 தொடரில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியுடன் இருக்கும். அவரது முன்னாள் இலங்கை அணி வீரரான லசித் மலிங்கவும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.

