Wednesday, July 1, 2026 9:33 pm
வெனிசுலாவைத் தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களால் 58,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்திருக்கலாம் அல்லது அழிந்திருக்கலாம் என செயற்கைக்கோள் தரவுகளின் முதற்கட்ட பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இந்த அழிவின் அளவு அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளை விட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அது சுட்டிக்காட்டுகிறது.
கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 , 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களால் குறைந்தது 1,943 பேர் உயிரிழந்தனர், 10,571க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு மத்தியில் காணாமல் போயுள்ளனர். இந்தப் பேரழிவுகளால் 68 லட்சம் மக்கள் வரை பாதிக்கப்படக்கூடும் என்றும், அவர்களுக்குத் தங்குமிடம், தண்ணீர், சுகாதாரம், மருத்துவப் பராமரிப்பு மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் என்றும் ஐ.நா. இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

