Friday, July 17, 2026 12:23 pm
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் வெளியிடப்பட்ட 50க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழக வெற்றி கழக அரசு அதிரடியாக இரத்து செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இந்த துறையில் உரிய விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் முறையாக பின்பற்றாமல் அவசர அவசரமாக டெண்டர்கள் வெளியிடப்பட்டதே இந்த அதிரடி நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்து செய்யப்பட்டுள்ள டெண்டர்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த டெண்டர்கள் அனைத்தும் மீண்டும் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, தகுந்த விதிமுறைகளின்படி வெளிப்படையான முறையில் புதிய டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள பல பெரிய திட்டங்களின் டெண்டர்கள் இரத்து செய்யப்பட்டு மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத்துறையின் குறுகிய கால டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

