Saturday, July 18, 2026 2:03 am
வி.இ.குகநாதன்
அரையிறுதிப் போட்டித் தோல்வியின் பின்பு இங்கிலாந்து அணிப் பயிற்சியாளர் தாமசு துசெல், மெசி குறித்துத் தெரிவித்த சில கருத்துகள் நோக்கத்தக்கவை. அவையாவன
ஒரு கிழமையாக அவரைத் தடுக்க நாங்கள் திட்டமிட்டோம். அதனைப் போட்டியின் மிகப் பெருமளவான நேரத்துக்குச் செயற்படுத்தியும் காட்டினோம், ஆனால் அவர் காத்திருந்தார். தனக்குப் பொருத்தமான வேளை வரும் வரைக் காத்திருந்தார். இறுதி ஐந்து மணித்துளிகளில் நாம் விட்ட சிறு தவறுகளை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இரண்டு கோல்களுக்கு உதவினார். நாம் ஒரு கிழமையாக வகுத்த திட்டத்தினை முறியடிக்க அவருக்கு ஐந்து மணித்துளிகள் போதுமாக இருந்தது. 85 மணித்துளிகள் வரை அவரினைத் தடுத்து நிறுத்தலாம், ஆனால் அவரால் 5 நொடிகளில் ஆட்டத்தை மாற்ற முடியும்.
அவர் வழங்கிய இரு உதவிகளும் (assists) அவரது உதைபந்து அறிவினைக் காட்டுகின்றது. அவர் ஆட்டத்தினை வலுக்கட்டாயமாக நகர்த்துவதில்லை, எதிரணி ஒரு தவறு செய்யும் போது அவர் ஆட்டத்தினையே மாற்றி விடுகின்றார்.
மெசியிடம் ஒவ்வொரு முறை பந்து போகும் போதும் நான் எல்லைக் கோட்டிலிருந்து கத்தி எனது வீரர்களை எச்சரித்துக் கொண்டே இருந்தேன். எனது வீரர்களும் அதனை உணர்ந்திருந்தனர். மெசியினால் என்ன செய்ய முடியும் என்பதனை நாம் எல்லோரும் அறிந்திருந்தோம். அதனை அறிந்திருப்பது வேறு, களத்தில் அதனைத் தடுத்து நிறுத்துவது வேறு. அவர் ஏன் ஏனையோரிடம் இருந்து வேறுபட்டவர் என்பதனை நாம் அன்றிரவு அறிந்து கொண்டோம்.
மெசியின் விரைவு, வலிமை ஆகிய இரண்டும் பற்றி எல்லோரும் பேசுகின்றோம், ஆனால் அவரது மூளை தனித்துவமானது. அவரது மூளை அதி விரைவாகச் செயற்படுகின்றது. ஆட்டத்தின் விரைவினை அவரே தீர்மானிக்கின்றார். இடைவெளிகளைக் கையாள்வது, பந்தினைக் கடத்துவது, பந்தினைப் பெறுவதற்கான வேளைகளை உருவாக்குவது என அனைத்திலுமே அவரது உதைபந்து நுண்ணறிவினைத் திறம்பட பயன்படுத்துகின்றார். அதுவே அவரை ஏனைய வீரர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் காட்டுகின்றது.
தனது 39 ஆவது வயதிலும் விளையாட்டின் எல்லையினைத் தொட்டு, தனது நாட்டினை மற்றொரு இறுதிப் போட்டிக்கு அவர் நகர்த்திச் சென்றிருக்கின்றார். அத்தகைய ஒரு வீரரால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றோம்.
குறிப்பு – ‘தலை’ THALA என்ற அடைமொழியினை பிபா (FIFA) அமைப்பு மெசிக்கு வழங்கி ஒரு படவரிப் பதிவினை (Instagram Post) முன்பு செய்திருந்தது, அந்த அடைமொழிக்கு முற்றிலும் தகுதியானோர்தான் மெசி.

நீங்கள் பலரும் ஒன்றினைக் கவனித்திருக்கக் கூடும். மெசி பெருமளவுக்கு இடது காலினையே பயன்படுத்தி விளையாடுவார், அவரது பெரும்பாலான சிறந்த உதைகள் இடதுகாலால் நிகழ்த்தப்பட்டவை, அவர் அடித்த இலக்குகளில் (goals) 85% இடது காலால் அடிக்கப்பட்டவை, எனவே அவரினை ஒரு இடதுகால் வீரர் எனலாம்; அதேவேளை எழுதுவதற்கு அவர் பயன்படுத்துவதோ வலது கை. மரிடோனாவும் அவ்வாறானவரே. இவ்வாறானவர்களுக்கு இரு பக்க (வலது-இடது) மூளையும் சமமாக வேலை செய்யும், இதனை ‘crossed laterality’ (crossed dominance) என்பர். இத்தகைய திறன் உடையவர்கள் பல துறைகளில் ஒளிர்வார்கள், குறிப்பாக உதைபந்து போன்ற ‘குறுகிய நேரத்தில் விரைவாக முடிவெடுக்க வேண்டிய’ விளையாட்டுகளில் திறம்படச் செயற்படுவர். இத்தகைய திறன்களை உடைய சிறுவர்களின் திறன்களை எம்மவர்கள் பலர் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள். நாம் இடது கை எழுத்துத் தனித்துவத்தையே இன்னமும் முழு மனதுடன் ஏற்கும் குமுகமாக மாறவில்லையே! பின்பு எப்படி இதை எல்லாம் எதிர்பார்க்க முடியும்? வளரும் பயிர்களை முளையிலேயே கிள்ளி எறியக் கூடாது.

