Tuesday, May 5, 2026 4:52 pm
திமுக, அதிமுக ஆகியவற்றின் கோட்டை என அறியப்பட்ட பல்வேறு இடங்களிலும் விஜய்யின் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
மாநிலம் முழுவதும் விசில் ஒலித்தும் தவெகவுக்கு தென்காசி மாவட்டம் கைகொடுக்கவில்லை. அதிமுக ஒரு இடத்திலும், திமுக 3 இடங்களில் மதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
ஆலங்குளம் தொகுதியில் ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த மனோஜ் பாண் டியன் மீண்டும் திமுக சார்பாக போட்டியிட்டார். அதிமுக சார்பில் முன்னாள் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பிரபாகரன் களம் இறங்கினார். இந்த தொகுதியிலும் தவெக சார்பில் போட்டியிட்ட விபின் சக்கரவர்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தார்.
தென்காசி தொகுதியில் அதிமுக – திமுக வேட்பாளர்கள் இடையேதான் போட்டி நிலவியது. தவெக. வேட்பாளர் ராஜபிரகாஷ் 3-ம் இடம் பெற்றார். திமுகவின் கலை கதிரவன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
சங்கரன்கோவில் அதிமுக கோட்டை சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை பெரும்பாலும் அதிமுக கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற 17 தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறது. இந்த முறையும் திமுகவிடம் இருந்து சங்கரன்கோவில் தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது. இங்கு தவெக வேட்பாளருக்கு 2-வது இடம் கிடைத்தது.
வாசுதேவநல்லூர் வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளரான ராஜா ஏற்கனவே சங்கரன்கோவில் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.. மேலும் அவர் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். வாசுதேவநல்லூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி பலம் வாய்ந்தவராக திகழ்ந்தார். இதனால் தவெக வேட்பாளர் அமுதாராணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடையநல்லூர் தொகுதியிலும் அதிமுக மாவட்ட செயலாளர் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான கிருஷ்ணமுரளி மற்றும் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க வேட் பாளர் ராஜேந்திரன் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இதனால் கடையநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் அப்துல் ஜலீல் 3-ம் இடம் பிடித்தார்.
தென்காசி மாவட்டத்தில் விஜய் நேரடியாக பிரசாரத்துக்குச் செல்லவில்லை. தென்காசி பகுதியில் அவர் ரோடு ஷோ வந்து தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பிரசாரம் செய்யாதது தவெகவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

