Tuesday, October 6, 2026 5:02 pm
காங்கோ ஜனநாயகக் குடியரசில் வசித்து வந்த கென்ய நாட்டவர் ஒருவர் நாடு திரும்பிய பின்னர் உயிரிழந்ததை அடுத்து, கென்யா தனது வரலாற்றில் முதல் எபோலா மரணத்தைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் செவ்வாயன்று அறிவித்தார் .
கடந்த 50 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் 15,000-க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்த, மிகவும் கொடிய நோயான எபோலா பரவலை, மே மாத நடுப்பகுதியில் காங்கோ ஜனநாயகக் குடியரசு தனது 17-வது முறையாக அறிவித்தது .
கென்யா இதற்கு முன்பு ஒரு பாதிப்பைக் கூடப் பதிவு செய்யாத நிலையில், அண்டை நாடான உகாண்டாவில் 20 எபோலா பாதிப்புகளும் (இவர்களில் ஏறக்குறைய அனைவரும் காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து பயணம் செய்தவர்கள்), இரண்டு மரணங்களும் பதிவாகின. பின்னர் ஓகஸ்ட் மாதம் அந்நாடு எபோலா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.
பெயர் குறிப்பிடப்படாத அந்த கென்ய குடிமகன், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, காங்கோ ஜனநாயகக் குடியரசில் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் தரைவழியாக உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவிற்குப் பயணம் செய்து, அங்கிருந்து அக்டோபர் 3 ஆம் திகதி நைரோபிக்கு விமானத்தில் சென்றதாகவும் கென்ய சுகாதார அமைச்சர் அடென் டுவாலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இறந்தவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள்,சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 28 பேரை அதிகாரிகள் பட்டியலிட்டிருந்ததாகவும், ஆனால் இதுவரை “நாம் சற்றுமுன் விவாதித்த அந்த ஒரு பரிசோதனைக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் டுவாலே கூறினார்.
இருப்பினும், அந்த நபருடன் அதே விமானத்தில் பயணித்த மேலும் 23 பயணிகள் ,நான்கு விமானப் பணியாளர்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும், ஆபத்தில் உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான “ஏற்பாடுகள்” செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். “நோயின் பரவலைத் தணிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

