Saturday, November 21, 2026 8:51 pm
இந்தியாவுக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஒரு வருடத்தில் இந்திய அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங் கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் கிளென் பிலிப்ஸ் 7வது வீரராக களம் இறங்கினார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 51வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் 73 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இந்த அதிரடி ஆட்டம் மூலம், 2026ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்கு எதிராக பிலிப்ஸ் 756 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் சக வீரர் டேரில் மிட்செல் ஒரே ஆண்டுள் இந்தியாவுக்கு எதிராக அடித்த 754 ஓட்டங்கள் சாதனையை அவர் முறியடித்தார்.
முன்னதாக 1999ல் கிறிஸ் கெய்ர்ன்ஸ் அடித்த 665 ஓட்டங்களே பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தது. 2026 ஆம் ஆண்டில் பிலிப்ஸ் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய 11 ரி20 போட்டிகளில் 522 ஓட்டங்களும், 6 ஒருநாள் போட்டிகளில் 180 ஓட்டங்களும் குவித்துள்ளார். தற்போது முதல் டெஸ்டில் 55 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் முடிந்த ரி20 தொடரிலும் தொடர் நாயகன் விருதை இவரே வென்றார். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 18 போட்டிகளில் 17 இன்னிங்ஸ்களில் 58.3 சராசரியுடன் 756 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதில் 2 சதங்கள் , 5 அரைசதங்கள் அடங்கும்.
இந்த சாதனையை எட்டும் முன்பே, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 1,000 ஓட்டங்களையும் பிலிப்ஸ் நிறைவு செய்தார். தனது 20வது டெஸ்டின் 34வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார். ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சர்வதேச ஓட்டங்கள் குவித்த உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கார்டன் கிரீனிட்ஜ் தன்வசம் வைத்துள்ளார். அவர் 1983ல் 1,337 ஓட்டங்கள் எடுத்திருந்தார். தற்போது நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் கிளென் பிலிப்ஸ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

