Saturday, June 13, 2026 10:05 pm
கனடாவின் டொராண்டோ மைதானத்தில் நடைபெற்ற குரூப் பி பிரிவு லீக் போட்டியில் விளையாடிய பொஸ்னியா, கனடா ஆகியவை தலா ஒரு கோல் அடித்தன. பொஸ்னியாவுக்கு எதிரான போட்டியில் பின் தங்கியிருந்த கனடா அணி, மாற்று வீரராக களம் கண்ட கைல் லாரினின் அதிரடி கோலால் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது.
இப்போட்டியில், தொடக்கம் முதலே சொந்த நாட்டு ரசிகர்களின் பேராதரவுடன் கனடா அணி ஆதிக்கம் செலுத்தியது. எனினும், ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பொஸ்னியா அணி முதல் கோலை அடித்தது. இவான் பாசிக் வீசிய கார்னர் பந்தை சீட் கொலாசினாக் தட்டிவிட, அதைப் பயன்படுத்திய ஜோவோ லுகிக் பந்தை கோலாக மாற்றினார். இது அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் முதல் கோலாகும். இதனால் முதல் பாதி முடிவில் போஸ்னியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் கனடா அணி ஆக்ரோஷமாக விளையாடி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் கனடாவின் ரிச்சி லாரியா அடித்த பந்து கோல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொஸ்னியா வீரர் கொலாசினாக் அதனை கோல் கோட்டிற்குள் இருந்து தடுத்து கிராஸ்பாரில் படச் செய்து அற்புதமாகக் காப்பாற்றினார். காயமடைந்த கப்டன் அல்போன்சோ டேவிஸ் இல்லாத நிலையிலும் கனடா வீரர்கள் தொடர்ந்து போராடினர்.
தோல்வியின் விளிம்பில் இருந்த கனடா அணிக்கு மீட்பராக நட்சத்திர வீரர் கைல் லாரின் உருவெடுத்தார். ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய அவர், அடுத்த 2 நிமிடங்களிலேயே (78வது நிமிடத்தில்) ஒரு அபாரமான கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். பிராமிஸ் டேவிட் கொடுத்த பாஸை லாரின் லாவகமாக கோலாக மாற்றினார். கூடுதல் நேரத்தில் அவர் அடித்த மற்றொரு கோல் வாய்ப்பை பொஸ்னியாவின் தாரிக் முஹாரெமோவிக் தடுத்துக் காப்பாற்றினார்.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கிண்ணப் போட்டியில் களம் காணும் பொஸ்னியா அணி, இந்த கடினமான ஆட்டத்தின் மூலம் 1 புள்ளியை பெற்றது. கனடா அணிக்கும் 1 புள்ளி வழங்கப்பட்டது.

