Monday, June 15, 2026 9:11 pm
உலகக்கிண்ணப் போட்டியில் குராசாவோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற ஜேர்மனி அணி புதிய வரலாற்றுச் சாதனையுடன் தனது உலகக் கிண்ணப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டத்தில் 4 முறை சம்பியனான ஜேர்மனி, முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற தகுதி குராசாவோ ஆகியன மோதின. 2014 ஆம் ஆண்டு பிறேஸிலில் நடந்த உலக்க்கிண்ணப் போட்டியில் சம்பியனான ஜேர்மனி, கடந்த 2018 , 2022 உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் ஆட்டங்களில் முறையே மெக்சிகோ , ஜப்பானிடம் தோற்று ஏமாற்றமளித்த ஜேர்மனி, இம்முறை அந்த மோசமான தொடக்கம் பெறும் அணி என்ற பெயரை உடைத்தெறிந்துள்ளது. அத்துடன் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணிகள் பட்டியலில் பிறேஸிலை பின்னுக்குத் தள்ளி ஜேர்மனி முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்திலேயே ஜேர்மனியின் பெலிக்ஸ் நமேச்சா முதல் கோல் அடித்து அசத்தினார். எனினும், ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் குராசாவோ அணியின் லிவானோ கொமெனென்சியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்து அதிர்ச்சியளித்தார். இந்தகோல் அந்த அணியின் சாதனையாகும். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜேர்மனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 38வது நிமிடத்தில் நிகோ ஸ்லாட்டர்பெக் ஒரு கோலும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் காய் ஹாபர்ட்ஸ் பெனால்டி மூலம் ஒரு கோலும் அடிக்க, முதல் பாதியில் ஜேர்மனி 3-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி தொடங்கிய 69 விநாடிகளிலேயே ஜமால் முசியாலா 4வது கோலை அடித்தார். தொடர்ந்து நதானியேல் பிரவுன் (68வது நிமிடம்), டெனிஸ் உண்டாவ் (78வது நிமிடம்) ,ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் காய் ஹாபர்ட்ஸ் தனது 2வது கோலை அடித்தார். இதனால் ஜேர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஜேர்மனி அணி மொத்தம் 26 முறை கோல் அடிக்க முயற்சித்தது.

