Saturday, September 12, 2026 8:49 pm
அம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் ‘ஸ்மார்ட் கீ’ (Smart Key) திறப்புகளைத் திருடி விற்பனை செய்யும் மோடியில் ஈடுபட்டு வந்த துறைமுக ஊழியர் ஒருவரும், அந்தத் திறப்புகளை வாங்கிய வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் நேற்று (11) அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ‘ஸ்மார்ட் கீ’ காணாமல் போனமை தொடர்பாக அம்பாந்தோட்டை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட நீண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, துறைமுக ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அந்த ஊழியரைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
துறைமுக ஊழியரிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட ஸ்மார்ட் கீ திறப்புகளைக் குருநாகல் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாகன வகைக்கு ஏற்ப 6,000 ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் மூலம் கடந்த சில மாதங்களில் சுமார் 45 ‘ஸ்மார்ட் கீ’ திறப்புகளை விற்பனை செய்து, சந்தேக நபரான ஊழியர் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் ஈட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

