Saturday, September 12, 2026 8:39 pm
“மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலுக்கு இடையே பிரிக்ஸ் நாடுகள் அமைதியை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், “மத்திய கிழக்கில் நிலவும் மோதல், சர்வதேச சமூகத்தின் பொது நலன்களுக்கு உகந்தது அல்ல. எனவே மத்திய கிழக்கு மோதலில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைதியை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். அந்தப் பணியில் மற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும்.
பிரிக்ஸ் கூட்டமைப்பை ‘குளோபல் சவுத்’ பிராந்தியத்தில் ஒரு முன்னணி அமைப்பாக உள்ளது. புதுமை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய வளரும் நாடுகளின் சுயசார்புக்கான ஒரு முன்மாதிரியாக இந்த அமைப்பு உள்ளது” என்றார்.
2027-ஆம் ஆண்டில், பிரிக்ஸ் அமைப்பின் சுழற்சி முறைத் தலைமைப் பொறுப்பைச் சீனா ஏற்கவுள்ளது. இது குறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, ‘உண்மையான பன்முகத்தன்மை மூலம் ஒற்றுமைக்கான அடித்தளத்தை வலுப்படுத்துதல், ஒத்துழைப்பு தளங்கள் மூலம் வளர்ச்சி உத்திகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த முன்னெடுப்புகள் மூலம் பொதுவான வளர்ச்சிக்கான உத்வேகத்தை உருவாக்குதல் ஆகியவற்றைச் சீனா தொடர்ந்து மேற்கொள்ளும்.
முன்னதாக, இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ , அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எதியோப்பிய பிரதமர் அபி அகமது அலி, எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாக் எல்-சிசி ,வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

