Thursday, May 14, 2026 7:30 pm
சீனாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த சீன ஜனாதிபதி ஷி ஜிபிங், தைவான் விவகாரம் “சரியாகக் கையாளப்படாவிட்டால்” “மோதல்கள் , சிறு சண்டைகள் கூட” ஏற்படக்கூடும் என்று கடுமையாகப் பேசினார் என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தங்களது உச்சிமாநாட்டின் போது, கடந்த ஆண்டு நடந்த வர்த்தகப் போருக்குப் பிறகு தங்களது வர்த்தக உறவை நிலைப்படுத்த இரு தலைவர்களும் நோக்கம் கொண்டுள்ளனர். மேலும், அமெரிக்கா ஈரானுடன் நடத்தும் போர் குறித்த நிச்சயமற்ற தன்மையையும் அவர்கள் சமாளித்து வருகின்றனர் . ஆனால், அமெரிக்க-சீன உறவில் தைவானே தங்களது முதன்மையான முன்னுரிமை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது.
மூடிய அறைக்குள் நடந்த அந்த அமர்வு சுமார் இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது. வெள்ளை மாளிகை அந்த சந்திப்பை “நல்லது” என்று குறிப்பிட்டது.
சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் X தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் , “சீனா-அமெரிக்க உறவுகளில் தைவான் பிரச்சினைதான் மிக முக்கியமான விஷயம். அது சரியாகக் கையாளப்பட்டால், இருதரப்பு உறவு ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையை அடையும். இல்லையெனில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும், சண்டைகளும் கூட ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் தள்ளப்படும்” என்று ஷி ஜின்பிங் , ட்ரம்பிடம் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
சந்திப்பிற்குப் பிறகு, ட்ரம்ப்பும் ,ஷி ஜின்பிங்கும் பீஜிங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க சொர்க்கக் கோயிலுக்குச் சென்று, பின்னர் அரச விருந்துக்குச் சென்றனர்.
பேச்சுவார்த்தைகள் எப்படி நடந்தன என்று செய்தியாளர்கள் ட்ரம்பிடம் கேட்டபோது, அவை “சிறப்பாக” இருந்ததாகக் கூறிய அவர், சீனா ஒரு அழகான, அற்புதமான இடம் என்றும் குறிப்பிட்டார். தைவான் குறித்து விவாதித்தார்களா என்பது பற்றிய கேள்விகளை இரு தலைவர்களும் புறக்கணித்தனர்.

