Sunday, August 2, 2026 8:40 pm
ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் , ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல், அந்தச் சிறிய பசிபிக் தீவான துவாலுவு நாட்டின் முதல் கொமன்வெல்த் விளையாட்டுப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.
மகளிர் 75 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ஐந்து பேரில் ஒருவரான, இருபது வயது தரோனா தாஃபாகி, அரையிறுதிக்கு நேரடியாகத் தகுதி பெற்றார். அவர் வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின் லவ்லினா போர்கோஹைனிடம் ஒருமனதான புள்ளிகள் முடிவின் மூலம் தோல்வியடைந்தார். கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் , அரையிறுதியில் வெளியேற்றப்படும் அனைத்து குத்துச்சண்டை வீரர்களுக்கும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும்.
அவருடைய பயிற்சியாளரும் தந்தையுமான பாடி தாஃபாகி, உலகின் நான்காவது மிகச்சிறிய நாடான, 10 சதுர மைல் பரப்பளவுள்ள அந்த நாட்டின் 10,000 மக்கள்தொகையால் இந்தப் பதக்கம் கொண்டாடப்படும் என்று கூறினார்.
அந்தத் தீவின் மிகவும் நிலையான நிலப்பரப்பாக விமான நிலைய ஓடுபாதை இருப்பதால், விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் அங்கு பயிற்சி செய்கிறார்கள். இருப்பினும், கடல் மட்டம் உயர்ந்து வருவதால், 2050-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் தலைநகரான ஃபனாஃபூட்டியின் பாதிப் பகுதி நீரில் மூழ்கக்கூடும் என்று காலநிலை நிபுணர்கள் கணிக்கின்றனர்.
“ஆம், நாங்கள் ஓடுபாதையில்தான் பயிற்சி செய்கிறோம்,” என்றார் தாஃபாகி. “ஒரு விமானம் உள்ளே வரும்போது, அனைவரும் ஒதுங்கி நிற்பார்கள். அது புறப்பட்டுச் சென்றவுடன், நாங்கள் மீண்டும் விமான ஓடுபாதைக்குத் திரும்பி விடுவோம், ஏனென்றால் பயிற்சி செய்ய வேறு இடம் இல்லை.”
கொமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் போட்டியிட்ட தரோனாவும் அவரது சகோதரர் பசோனியும், சிறந்த வசதிகள் உள்ள நியூசிலாந்தில் வசிக்கின்றனர். “நான் வளர்ந்த காலத்தில், துவாலுவில் குத்துச்சண்டை என்பது அரிதாகவே இருந்தது,” என்றார் பாடி. “எங்களிடம் கையுறைகள் இல்லை, அதனால் நாங்கள் வெறும் கைகளால் சண்டையிடவும், மணல் நிரப்பப்பட்ட பைகளை அடிக்கவும் நிர்பந்திக்கப்பட்டோம். என் பிள்ளைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எனக்கு ஒருபோதும் கிடைக்காத வாய்ப்புகளும் வசதிகளும் அவர்களுக்கு உள்ளன. குத்துச்சண்டைதான் எங்கள் முழு வாழ்க்கை. வலிமை எங்கள் இரத்தத்தில் ஊறியுள்ளது. எங்கள் பரம்பரை அங்கிருந்துதான் வருகிறது.” என்றார்.

