Sunday, August 2, 2026 8:18 pm
மொரோக்கோவிலிருந்து ஒரே நேரத்தில் சுமார் 60,000 அகதிகள் ஸ்பெய்ன் நாட்டிற்குள் ஊடுருவியுள்ள சம்பவம் ஐரோப்பியப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடல் வழியாக ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் ஆபத்தான முறையில் நீந்திச் சென்றும், படகுகள் மூலமாகவும் ஸ்பெய்ன் எல்லையை கடந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அகதிகள் சாரை சாரையாக படையெடுத்து வருவதை தடுக்க எல்லை பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்ட போதிலும், அவற்றை மீறி அவர்கள் ஊடுருவி வருகின்றனர்.
ஸ்பெயினின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, எல்லை தாண்டி வருபவர்களை உடனடியாக நாடு கடத்த முடியாது என்பதால், அகதிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. சுமார் ஒரு இலட்சம் மக்கள் தொகை கொண்ட சியூட்டா என்ற பகுதியில், திடீரென பல்லாயிரக்கணக்கான மொரோக்கோ மக்கள் குவிந்ததால் சாலைகளில் இடம்பிடிப்பதில் அகதிகளுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
மனிதநேய அடிப்படையில் இவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஸ்பெயின் அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த திடீர் அகதிகள் பெருவெள்ளம் அந்த நாட்டின் பொருளாதார மற்றும் பாதுகாப்புச் சவால்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.

