Saturday, August 8, 2026 12:44 pm
உகாண்டாவின் மிகவும் பிரபலமான உதைப்ந்தாட்ட வீரரான டேவிட் ஓவோரி வழிப்பறிக் கும்பலுடன் நடந்த போராட்டத்தின் போது அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள தனது வீட்டருகே, செவ்வாய்க்கிழமை இரவு, 27 வயதான டேவிட் ஓவோரியின் தொலைபேசி ,பிற உடைமைகளைப் பறிக்க ஒரு கும்பல் நடத்திய வன்முறை முயற்சியை எதிர்த்தபோது அவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மகின்டியே என்ற ஆடம்பரமான புறநகர்ப் பகுதியில், ஸ்போர்ட்ஸ் கிளப் (SC) வில்லாவின் கப்டனான அவரை, தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று நடைபாதைக் கற்களால் தாக்கியதை நேரில் பார்த்தவர்கள் கண்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அவரது உடைமைகளுடன் தப்பிச் சென்றபோது, அவர் சுயநினைவிழந்து கிடந்தார்.
ஓவோரி அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் நகரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் புதன்கிழமை தனது காயங்களால் உயிரிழந்தார்.
உகாண்டாவின் தேசிய அணிக்காக விளையாடிய ஓவோரியின் மரணம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றம் புதன்கிழமை ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதுடன், ஓவோரியின் மரணம் குறித்து விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
2024-ல், அவர் SC வில்லா அணிக்கு 20 ஆண்டுகளில் முதல் லீக் பட்டத்தை வென்று கொடுக்க உதவினார், இது அந்த அணிக்கு 17-வது உயர்மட்டக் கோப்பையாகும்.
2021 ஆப்பிரிக்கக் கிண்ண தகுதிச் சுற்றுகளின் போது ஓவோரி ‘தி கிரேன்ஸ்’ அணியுடன் பணியாற்றினார், மேலும் எதிர்கால முக்கிய அழைப்புகளுக்கு ஒரு வலுவான தேர்வாகக் கருதப்பட்டார்.

