Tuesday, September 22, 2026 6:28 pm
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகள், தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களை இலக்காகக் கொண்டு தற்கொலைப்படை பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதி செய்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை எதிர்கொண்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மீதமுள்ள ஒன்பது பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் முக்கிய வழிகாட்டியாகவும், சதித்திட்டத்தின் முதன்மைச் சூத்திரதாரியாகவும் அடையாளப்படுத்தப்பட்ட நௌஃபர் மௌலவிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.
நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வு (Trial-at-Bar) இந்தத் தீர்ப்பை வழங்கியது.சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்த இந்த நீண்ட விசாரணையை மேற்படி சிறப்பு அமர்வு ஓகஸ்ட் 24 ஆம் திகதி நிறைவு செய்தது.
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

