Sunday, August 2, 2026 8:13 pm
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை ஒரே நேரத்தில் வழங்குவதில் மாநிலத்தின் நிதிநிலைமை சில நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
இந்தப் பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கவும், அரசின் நிதி நிர்வாகத்தைச் சீராக நிர்வகிக்கவும் ஊழியர்களின் பணிநீட்டிப்பு அல்லது வயது உயர்வைச் பரிசீலிப்பது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளதாகத் தெரிகிறது.
இதன் காரணமாகவே, உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு இந்த வயது உயர்வு குறித்த சாதக பாதகங்களை ஆராய்ந்து வருவதாகத் துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால் இளைஞர்களுக்கான புதிய அரசு வேலைவாய்ப்புகள் தாமதமாகும் என்ற விமர்சனங்களும் மறுபுறம் எழுந்துள்ளன.
அதேசமயம், ஓய்வூதிய நிதிச்சுமையைக் குறைப்பதற்கான ஒரு தற்காலிகத் தீர்வாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இது குறித்த இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் விவாதமும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

