Thursday, May 7, 2026 3:03 pm
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் மக்கள் எதிர்பார்த்த புதிய மாற்றத்தை வெளிப்படுத்தியதாக அமைந்தது. ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்த கட்சிகள் தலைகீழான முடிவுகளை சந்தித்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஏனைய நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த தமிழக சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு தொடர் ஏமாற்றம் அளிக்கும் விடயங்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.
நேற்று தமிழக ஆளுநரைச் சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். இந்தநிலையில் இன்று முதலமைச்சராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் பலமாக நடைபெற்றுவந்தன. நடைபெற்ற பதவியேற்பு ஏற்பாட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்றும் நேரில் சென்று சந்தித்தார். ஆளுநருடனான சந்தப்புக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்கள் விஜயுடன் சென்றனர்.
தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் ஆளுநர் அனுமதி வழங்காமை அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பதவியேற்புக்கு முன்பு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்றும் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். விஜய்யை ஆட்சியமைக்க விடாமல் ஆளுநர் இழுத்தடிப்பது ஏற்க முடியாததும் அருவருக்கத்தக்கதுமான செயல் என நடிகை பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
திமுக உடனான நீண்டகாலக் கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்துடன் நேற்று இணைந்தனர். ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு விஜய்க்குத் தேவையாக உள்ளது. இதற்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
இதற்கிடையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பல தசாப்தங்களாக அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டு வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் திராவிடக் கட்சிகள் ஒன்றிணைய உள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கைகோர்க்கும் சூழல் உருவாகியுள்ளதா என்பது மக்களிடையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. கொள்கை ரீதியாக மாறுபட்ட இந்த இரு கட்சிகளின் முடிவு தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இருந்தபோதிலும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வகையிலும் இடையூறாக அமையாது என அந்த கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிற்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்குரிய விசேட பாதுகாப்பு மற்றும் வாகன அணிவகுப்பு நிறுத்தப்பட்டமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அணிவகுப்பு இன்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நேற்று தனது நீலாங்கரை இல்லத்துக்குத் திரும்பியுள்ளார்.
நேற்று தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய போதிலும் ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில் அவருக்கான பாதுகாப்பு மீளப் பெறப்பட்டது.
ஆட்சியமைப்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் இன்றி அவர் இல்லம் வந்தடைந்தமை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

