Tuesday, May 5, 2026 2:41 pm
2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) உரையாற்றிய அவர், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
முன்னதாக அச்சிடப்பட்ட தொகுதிகளில் காணப்பட்ட சிக்கல்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்ட முடிவுகளை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய மறுசீரமைப்புகளின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகும் என்றும், இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மீளாய்வு செய்யப்பட்ட தொகுதிகள் இந்த மாதம் அச்சிட அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மறுசீரமைப்பு குறித்த விளக்கமளிப்புகள் ஜூலை மாதம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

