Friday, May 22, 2026 11:50 am
முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 89 ஓட்டங்களால் வீழ்த்தி 2026ம் ஆண்டு ஐபிஎல் அத்தியாயத்தில் இருந்து வெளியேற்றியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்த்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 89 ஓட்டங்களால் வெற்றியை தன்வசமாக்கியது.
நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்த முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் இருந்து வெளியேறியது.
இந்தப் போட்டியுடன் குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அவ்வணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கிறது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் வீரர்களின் அதிரடி ஆட்டங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 229 ஓட்டங்களைக் குவித்தது.
சாய் சுதர்சன், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் பவ்ர் ப்ளே நிறைவில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை கொடுத்தனர். இருவரின் ஜோடியும் முதலாவது விக்கெட்டில் 74 பந்துகளில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷுப்மான் கில் ஆட்டம் இழந்தார். 23 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்த ஷுப்மான் கில் 37 பந்துகளில் 7 பவுண்டறிகள் 3 சிக்ஸ்களுடன் 64 ஓட்டங்களைப் பெற்றார்.
மொத்த எண்ணிக்கை 207 ஓட்டங்களாக இருந்தபோது சாய் சுதர்சன் 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 53 பந்துகளில் 7 பவுண்டறிகளையும் 4 சிக்ஸ்களையும் விளாசினார். தனது 14 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 7 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 638 ஓட்டங்களைக் குவித்துள்ள சாய் சுதர்சன் ஊதா தொப்பியை தனதாக்கிக்கொண்டார்.
சுதர்சனும் ஜொஸ் பட்லரும் 2ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜொஸ் பட்லர் 27 பந்துகளில் 5 பவுண்டறிகள் 4 சிக்ஸ்கள் உட்பட 57 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
230 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 13.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்து இந்த வருட ஐபிஎல் இலிருந்து விடைபெற்றது.
சஞ்சு செம்சன் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். ஷிவம் டுபே 17 பந்துகளில் 4 பவுண்டறிகள் 4 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களைக் குவித்தார். மெத்யூ ஷோர்ட் 24 ஓட்டங்களையும் கார்த்திக் ஷர்மா, அனுஷுல் கம்போஜ் ஆகிய இருவரும் தலா 19 ஓட்டங்களையும் ருத்துராஜ் கய்க்வாட் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ராஷித் கான் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், மொஹம்மத் சிராஜ் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், கெகிசோ ரபடா 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக மொஹம்மத் சிராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க நேற்றைய போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் அவசியமாக இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே சிஎஸ்கேவால் 14 புள்ளிகள் பெற்றிருக்க முடியும். ஆனால் இருந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட்டு சிஎஸ்கே வெளியேறியிருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேயிருந்தாலும் இந்தப் போட்டியின் வெற்றி அவர்களின் டாப் 2 வாய்ப்பை பலப்படுத்தியிருக்கிறது. லீக் சுற்றில் 14 போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்றிருக்கும் டைட்டன்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2026 ஐபிஎல் கோப்பைக்கான போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது என்று சொல்லலாம். தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கிறது இந்த அணி.
இந்த சீசன் தொடக்கமே சூப்பர் கிங்ஸுக்கு மோசமாகத்தான் இருந்தது. முதல் 3 போட்டிகளிலுமே தோற்று பின்தங்கியிருந்தது. அதற்கடுத்த 8 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்று நல்ல கம்பேக் கொடுத்து ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனாலும் கடைசி 3 போட்டிகளிலுமே தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.
பிளே ஆஃப் வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்தது சிஎஸ்கே ரசிகர்கள் உள்ளிட்ட கிரிகெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

