Thursday, June 18, 2026 3:17 pm
அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் சடலம் கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நேற்று தெல்தெனிய பொலிஸாருக்கு கடைத்த தகவலின் அடிப்படையில் பூட்டப்பட்டிருந்த காருக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராகப் பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்த பெண்ணும் அவரது காதலனும் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கியிரந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்தபோது மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
உயிரிழந்த பெண்ணுடைய காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு சடலம் குறித்துத் தகவல் வழங்கியவர் உயிரிழந்த பெண்ணின் காதலன் என சந்தேகிக்கப்படும் நபரே என்பதும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன் அவரைக் கண்டுபிடிப்பதற்காக நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்ப குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

