Thursday, June 18, 2026 2:03 pm
52 ஆண்டுகளுக்குப் பின்னர் பிபா உலகக் கிண்ண அரங்கிற்குத் திரும்பிய கொங்கோ ஜனநாயகக் குடியரசு அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாகப் போராடி 1-1 என்ற கணக்கில் போர்த்துக்கல் அணியை சமன் செய்தது.
இது போர்த்துக்கல் அணிக்கும் அதன் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் கிடைத்த ஏமாற்றமாக காணப்படுகின்றது. பெட்ரோ நெட்டோ அனுப்பிய பந்தை 15 மீட்டர் தொலைவிலிருந்து ஜோவா நீவ்ஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
1974-க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற கொங்கோ குடியரசு ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி முதல் பாதியின் இறுதியில் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடங்களில் ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது.
இந்த போட்டியில் ஆறாவது உலகக் கிண்ணத்தில் விளையாடும் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோவால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஆட்டங்களில் பந்தைத் தொட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் இது இரண்டாவது மிகக் குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது. இதன்மூலம் முக்கிய சர்வதேச தொடர்களில் ரொனால்டோ கோல் அடிக்காமல் இருக்கும் 10வது தொடர் போட்டியாக நீடித்துள்ளது.

நேற்றைய உலகக் கிண்ண போட்டியின் மூலம் வரலாற்றிலேயே மிக அதிக வயதில் தொடக்க வீரராகக் களம் கண்ட அவுட்ஃபீல்ட் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை போர்ச்சுகல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். இதன் மூலம் 2022 உலகக் கிண்ணத்தில் கனடா நாட்டு வீரர் அதிபா ஹட்சின்சன் உருவாக்கியிருந்த முந்தைய சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.
நடப்பு ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் கொங்கோஅணிக்காக ஸ்டார்டிங் லெவனில் களம் கண்டிருந்தார் தமிழ் வம்சாவளி வீரரான சாமுவேல் முத்துசாமி. 29 வயதான நடுகள வீரரான சாமுவேல் முத்துசாமி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர். இவரது தாய் கொங்கோ நாட்டைச் சேர்ந்தவர். தந்தை கரீபியன் தீவுகளில் ஒன்றான குவாதலூப்பைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி ஆவார். 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து குவாதலூப்புக்கு இவரது முன்னோர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.


