Thursday, June 18, 2026 2:59 pm
நேற்றைய தினம் (17) காங்கேசன்துறை ஊடாக நாகபட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் ஆறு பேரின் உடம்பிற்குள் தங்கத்தை கடத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் பயணிக்கும் , பயணிகள் பலர் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் 26 பயணிகள் தடுத்து வைக்கப்பட்டு ஸ்கானிங் பரிசோதணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
நாகபட்டினம் காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் பயணிக்க காங்கேசன்துறை துறைமுகத்தில் காத்திருந்த பயணிகளில் 26 பேரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்காது தடுத்து வைத்தனர்.
தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டபோதும் 17 பேரே போதனா வைத்தியசாலை அழைத்து வரப்பட்டு ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் தங்கத்தை விழுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நான்கு இந்திய ஆண்களும் இரண்டு இலங்கை பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

