Tuesday, September 22, 2026 1:23 pm
சவூதி தரப்பு வழக்கறிஞர்கள் (prosecution) தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இதேவேளை அனோஜனுக்காக இலங்கை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் இணையக் குற்றச் சட்டங்களுக்குப் பதிலாக ஷரியா சட்டத்தின் கீழ் அனோஜனை விசாரிக்க வேண்டும் என்று சவூதி தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்து இராஜதந்திர ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கை, சவூதி சட்ட நிபுணர்களிடமிருந்து சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அனோஜனுக்கு மன்னிப்பு கோரி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சவூதி மன்னருக்கு எழுதிய கடிதத்தை கையளிக்க, பிரதி சபாநாயகர் தலைமையிலான விசேட குழுவொன்று சவூதி அரேபியாவுக்குச் செல்ல உள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது சவூதி வெளியுறவு அமைச்சரைச் சந்திக்கும்போது மரண தண்டனையை இரத்து செய்யுமாறு அல்லது தண்டனையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும்.
அனோஜனுக்காக சவூதி அரேபியாவில் ஏற்படும் அனைத்து சட்டச் செலவுகளையும் இலங்கை அரசாங்கமே ஏற்கும். அனோஜனின் குடும்பத்தினர் ஏற்கனவே மேற்கொண்ட ஏதேனும் சட்டச் செலவுகள் இருந்தால், அதற்கான தொகையையும் அரசாங்கம் மீள வழங்கும் என்றார்.

